நாட்டின் பல பகுதிகளிலும் மழையுடனான வானிலை..

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்

by Staff Writer 20-09-2026 | 7:57 AM

COLOMBO (News 1st) மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, வடமேல், வட மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 02 மணிக்குப் பின்னர் இடைக்கிடையே மழைப் பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய மலை நாட்டின் மேற்குச் சரிவுகளிலும் வட மத்திய, வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. 

வங்காள விரிகுடாவின் அந்தமான் கடற்பிராந்தியத்தை அண்மித்து ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதனால், வங்காள விரிகுடா கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கூடும் எனவும் 

 மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன், புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதன்காரணமாக, மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களை இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.