குலசிங்கம் திலீபன் பிணையில் விடுதலை

வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் பிணையில் விடுதலை

by Staff Writer 20-12-2024 | 9:57 PM

Colombo (News 1st) வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இன்று(20) கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

காணி கொடுக்கல் வாங்கலொன்று தொடர்பில் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலை மோசடி குற்றச்சாட்டில் வவுனியா விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று(20) ஆஜர்ப்படுத்தப்பட்ட போது குறித்த பணத்தொகையில் 3 இலட்சம் ரூபாவை  அவர் செலுத்தியதுடன் மிகுதிப் பணத்தை செலுத்த இணங்கியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதற்கமைய 15 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஜனவரி 24 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.