Colombo (News1st) சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் இன்றாகும்.
இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள், மூத்தோர் சொல் அமிர்தம் என்பர்.
அனைத்து சிறுவர்களையும் உள்ளடக்கிய சமஉரிமை (Inclusion, for every child) எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது.
சிறுவர்களுக்கிடையே புரிந்துணர்வையும் பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதை நோக்காகக்கொண்டு 1954 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் சிறுவர் தினம் தொடர்பான பிரகடனம் வௌியிடப்பட்டது.
சிறுவர்களின் எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை சிறப்பாக அமைக்கும் நாளாக இன்றைய நாள் எதிர்பார்க்கப்படுகின்றது.
கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் சிறுவர்களை சென்றடைவது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
பாடசாலைக் கல்வி மறுசீரமைக்கப்படுதல் மற்றும் நவீன உலகின் சவால்கள் பற்றிய அறிவை சிறுவர்களுக்கு வழங்குதல் ஆகியவற்றின் மூலம் சிறுவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கண்டறிய முடியும் என கல்வியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, சர்வதேச சிறுவர் தினமான இன்று(01) சிறுவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி அவர்களை வலுப்படுத்த உறுதி பூணுவோம்.
இதேவேளை, இன்று சர்வதேச முதியோர் தினமும் அனுஷ்டிக்கப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் முதியோர்களுக்கான பராமரிப்பு மற்றும் ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் ( The Importance of Strengthening Care and Support Systems for Older Persons Worldwide )எனும் தொனிப்பொருளில் இம்முறை முதியோர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
1990 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் ஒக்டோபர் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
2030 ஆம் ஆண்டு முதியோர் தொகை சர்வதேச ரீதியில் இளைஞர்களை விட அதிகமாக இருக்கும் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆண்டொன்று போனால் வயதொன்று போகும் என்பது உண்மை. அனுபவங்களின் அமுதசுரபியாக முதியவர்கள் மட்டுமே இருக்க முடியும்.
முதியவர்களை அன்பு , அரவணைப்பு மற்றும் பாசத்துடன் கவனித்துக் கொள்வதற்கு பதிலாக அவர்களை இன்று பெரும் வாழ்க்கை சுமையாக எண்ணி முதியோர் இல்லங்களில் சேர்த்து விடும் கலாச்சாரமே உருவாகியுள்ளது.
முதுமை பருவத்தில் அவர்களுக்கு மன அமைதியான வாழ்க்கையை கொடுக்க வேண்டும்.
பாசத்திற்காக ஏங்கும் இவர்களின் நிலையே நாளை நமக்கும் என்பதை நாம் உணர வேண்டும்.
வாழ்க்கையை எமக்கு அடையாளம் காட்டியவர்களை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரதும் பொறுப்பு என்பதை நியுஸ்பெஸ்ட் வலியுறுத்திகின்றது.
இதேவேளை, உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் தமது வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்துள்ளனர்.
ஏழ்மை, போசாக்குக் குறைபாடு, சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, சமூக வாய்ப்புகளில் ஏற்றத்தாழ்வு, போதைப்பொருள், தொழில் நுட்பத்தின் தவறான பயன்பாட்டிற்கு பலியாவது போன்றவை சிறுவர்கள் எதிர்கொள்ளும் சவால்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதென ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையிலுள்ள ஒவ்வொரு பிள்ளைக்கும் பயனளிக்கும் உயர்தரமான பொதுக் கல்வி முறைமையை வழங்க உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
பொருளாதார வரையறைகள் என்ற சுமைகளிலிருந்து விடுபட்டு, வாய்ப்புகள் நிறைந்த உலகில் அவர்கள் செழித்தோங்குவதற்குத் தேவையான வசதி வாய்ப்புகளுடன் சிறுவர்களை வளப்படுத்துவதே தமது தொலைநோக்காகும் என அவர் கூறியுள்ளார்.