நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 5 பேர் உயிரிழப்பு

by Staff Writer 21-12-2024 | 8:33 PM

Colombo (News 1st) நாட்டின் சில பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 5 பேர் உயிரிழந்ததுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹட்டன் - மல்லியப்பூ பகுதியில் தனியார் பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 46 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டனில் இருந்து கண்டி ​நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பஸ் மல்லியப்பூ பகுதியில் இன்று முற்பகல் 20 அடிபள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

காயமடைந்த சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டிக்கோயா ஆதார வைத்தியசாலை பேச்சாளரொருவர் கூறினார்.

காயமடைந்தவர்களில் அதிகமானோர் ஹட்டன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 3 பேர் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

பலத்த காயமடைந்த சிலர் கண்டி பொதுவைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

இதேவேளை, கடுகண்ணாவையில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக கடுகண்ணாவ பிரதேச வைத்தியசாலையின் அதிகாரியொருவர் கூறினார்.

கொழும்பிலிருந்து தெல்தெனிய நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று கடுகண்ணாவ டொஷன் கோபுரம் பகுதியில் விபத்திற்குள்ளானது.

இதேவேளை, தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன் 6 பேர் காயமடைந்தனர்.

கொட்டாவையில் இருந்து பின்னதூவ நோக்கி பயணித்த வேன் ஒன்று, லொறியொன்றின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் 64 மற்றும் 75 வயதுகளை உடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.

வேன் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக்கலக்கமே விபத்துக்கான காரணமாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் வேன் மற்றும் லொறி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.