உப்பு இறக்குமதிக்கு அனுமதி கோரல்

உப்பு இறக்குமதிக்கு அனுமதி கோரல்

by Staff Writer 08-12-2024 | 3:17 PM

Colombo (News 1st) உப்பு இறக்குமதிக்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

உப்பு உற்பத்தியின் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களை முன்வைத்து நிறுவனங்கள் இந்த அனுமதியை கோரியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் தொழில் அமைச்சுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென அமைச்சர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் இலங்கை உப்பு நிறுவனத்திடம் வினவிய போது, தற்போது 12 மெட்ரிக் தொன் உப்பு கையிருப்பில் உள்ளதாக நிறுவனத்தின் பொது முகாமையாளர் R.M.குணரத்ன தெரிவித்தார்.

இந்த உப்பு தொகை எதிர்வரும் 2 மாதங்களுக்கு போதுமானது என அவர் கூறினார்.

மழையுடனான வானிலையால் கடந்த காலங்களில் உப்பு உற்பத்தி குறைவடைந்ததாக R.M.குணரத்ன தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலையால் உப்பு உற்பத்திக்கு ஏற்படும் சிக்கல்களை கருத்திற்கொண்டு உப்பு இறக்குமதிக்கான அனுமதி கோரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தற்போது நுகர்விற்கு தேவையான உப்பு நாட்டில் கையிருப்பிலுள்ளது.

எனினும் உப்புக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து விலையை சிலர் வெகுவாக அதிகரித்துள்ளதாக இலங்கை உப்பு நிறுவனத்தின் பொது முகாமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.