.webp)
-561189.jpg)
Colombo (News 1st) நபரொருவரை சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளிநாட்டில் இருக்கும் முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு உயர் நீதிமன்றம் இன்று(21) திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய பிரதிவாதிகளான சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் நிலந்த ஜயசிங்க மற்றும் கஹவத்த பிரதேச சபையின் முன்னாள் தலைவர் வஜிர தர்ஷன டி சில்வா ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015 ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசார மேடையொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஷாந்த தொடங்கொட எனும் நபர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர மற்றும் நிலாந்த ஜயசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடிவில், 2020 ஜூலை 31ஆம் திகதி பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட 03 பிரதிவாதிகளுக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பிற்கு எதிராக பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், 2022 மார்ச் 31ஆம் திகதி பிரதிவாதிகள் மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து தீர்ப்பளித்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் விடுதலை தீர்ப்பிற்கு எதிராக உயிரிழந்த ஷாந்த தொடங்கொடவின் மனைவி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மேன்முறையீட்டு மனு இன்று(21) உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி உயர் நீதிமன்றம் விடுத்திருந்த அறிவித்தலுக்கு அமைய, முதலாம் மற்றும் இரண்டாம் பிரதிவாதிகளான நிலந்த ஜயசிங்க மற்றும் வஜிர தர்ஷன டி சில்வா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
எனினும், மூன்றாம் பிரதிவாதியான முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
விடயங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், அவரை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பித்ததுடன், நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த ஏனைய இரு பிரதிவாதிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
