நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் ஒரு மணித்தியால மின்வெட்டு

by Nadeeshan Meedin 20-10-2026 | 8:01 AM

COLOMBO (News 1st) நாடளாவிய ரீதியிலான மின் முகாமைத்துவ நடவடிக்கைகள் இன்றும் (20) நாளையும்(21) தொடர்கின்றன.
இதற்கமைய முன்னெடுக்கப்படும் மின்வெட்டு நடவடிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (19) அனுமதி வழங்கியது.
நாட்டை 4 வலயங்களாகப் பிரித்து ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது. 
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (19) ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, இன்றும், நாளையும் மாலை 4.30 முதல் இரவு 8.30 வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி புத்திக சமரசேகர தெரிவித்துள்ளார். 
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தினால் உற்பத்தி செய்யப்படும் 810 மெகாவாட் மின்சாரம் இழக்கப்பட்டுள்ளமையினால் பிற்பகல் 4.30 முதல் இரவு 09 மணி வரையான அதிக கேள்வி நிலவும் காலப்பகுதியில் மின் உற்பத்தியில் பற்றாக்குறை நிலவுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 
இதற்கமைய நேற்று (19) முதல் 03 நாட்களுக்கு மின்வெட்டை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, நாளை (21) மறுதினம் (22) மாலை 4 மணியளவில் ஒரு மின்பிறப்பாக்கியை தேசிய கட்டமைப்புடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் தமக்கு அறிவித்துள்ளதாக தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி புத்திக சமரசேகர தெரிவித்துள்ளார். 
நுரைச்சோலை தவிர்ந்த ஏனைய அனைத்து மின்னுற்பத்தி நிலையங்களையும் பயன்படுத்தி 2500 முதல் 2600 மெகாவாட் வரை உற்பத்தி செய்ய முடியுமென எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார். 
எனினும், 2800 மெகாவாட்டுக்கும் அதிக மின்சாரத்திற்கான கேள்வி நிலவுமென எதிர்பார்க்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். 
இதற்கமைய, இன்றும் (20) , நாளையும் (21) மாலை 4.30 முதல் இரவு 8.30 வரையான காலப்பகுதியில், நாட்டை 4 வலயங்களாகப் பிரித்து ஒரு மணித்தியால மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார்.