சக்தி TV-க்கு இன்றுடன் 28 ஆண்டுகள்

தமிழ்பேசும் மக்களின் மனம் வென்ற சக்தி TV-க்கு இன்றுடன் 28 ஆண்டுகள்

by Staff Writer 20-10-2026 | 10:29 PM

Colombo (News 1st) தமிழ்பேசும் மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்து வீறு நடைபோடும் சக்தி TV தேசத்தின் சக்தியாய் 28ஆவது அகவையில் இன்று(20) காலடி எடுத்துவைக்கின்றது.

சக்தி TV-யின் 28ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் தமிழ் பாரம்பரியத்தை கொண்டாடும் நோக்கில் விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்றைய நிகழ்வில் கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேஷ் ஸ்ரீநிவாசன், கெப்பிட்டல் மகாராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டெனியல், MTV பிரதம நிறைவேற்று அதிகாரி யசரத் கமல்சிறி, சக்தி TV அலைவரிசை பிரதானி முருகேசு குலேந்திரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இன்றைய நிகழ்வில் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அரும்பெரும் பணியாற்றிய நால்வர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

எழுத்தாளர் மொழிவரதன் க.மகாலிங்கம், உலக அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட், இசைத்துறையில் சிறந்து விளங்கும் சின்னத்தம்பி பத்மலிங்கம், சிரேஷ்ட பரதநாட்டிய பயிற்றுவிப்பாளர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் ஆகியோரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் இதுவரை காலமும் சக்தி தொலைக்காட்சியுடன் இணைந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய 20 சான்றோர்களும் கௌரவிக்கப்பட்டனர்.