அதிர்ச்சியில் உறைய வைத்த அக்குறணை விபத்து

அக்குறணை கோர விபத்தில் நால்வர் உயிரிழப்பு

by Staff Writer 19-10-2026 | 6:47 PM

அக்குறணை - குருகொட 7 ஆம் கட்டைப் பகுதியில் இன்று (19) இடம்பெற்ற வாகன விபத்தில் 04 பேர் உயிரிழந்தனர்.
அளவத்துகொட பகுதியிலிருந்து கண்டி நோக்கி பயணித்த சீமெந்து கலவை வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து, 4 முச்சக்கர வண்டிகள், 3 மோட்டார் சைக்கிள்கள், டிப்பர் ரக வாகனமொன்று மற்றும் சிறிய லொறியொன்றுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்திற்கு உள்ளான சீமெந்து கலவை வாகனம் மின்மாற்றியொன்றுடன் மோதியுள்ளதுடன், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளொன்று தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 
விபத்தில் காயமடைந்த 06 பேர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
உயிரிழந்தவர்களில் பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றார். 
அக்குறனை, அளவத்துகொட மற்றும் மாத்தளை பகுதிகளைச் சேர்ந்தவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர். 
விபத்து தொடர்பில் சீமெந்து கலவை வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
46 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
விபத்தினால் கண்டி - மாத்தளை வீதியின் போக்குவரத்து சில மணித்தியாலங்கள் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.