நாட்டின் பல பகுதிகளில் 100mm மழை

நாட்டின் பல பகுதிகளில் 100mm மழை

by Staff Writer 21-10-2026 | 7:58 AM

Colombo (News 1st) நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தின் கீழ்மட்ட அடுக்கில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் நிலை, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதனால் நாட்டையும் நாட்டை சூழவுள்ள பகுதிகளிலுமுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பிராந்தியங்களில் மழையுடனான வானிலை இன்று(21) முதல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வௌியிடப்படும் அறிவித்தல்கள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு மீனவ, கடல்சார் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் மற்றும் அனுராதபுரத்தின் சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் வரை பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, மத்திய மற்றும் ஊவா மாகாணத்தின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, காங்கேசன்துறையிலிருந்து கற்பிட்டி, கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கரையோரப் பகுதிகளில் 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன், கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்காரணமாக, குறித்த கடற்பிராந்தியங்களில் தொழிலில் ஈடுபடும் மீனவ சமூகத்தினர் மற்றும் கடல்சார் ஊழியர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையின் காரணமாக தல்கஹகொட பகுதியில் நில்வலா கங்கையின் நீர் எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே கங்கையின் இருமருங்கிலும் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.