மீண்டும் ஆரம்பமான கொழும்பு - பேராதனை ரயில் சேவை

10 மாதங்களின் பின் மீண்டும் உதயமான கொழும்பு - பேராதனை ரயில் சேவை

by Staff Writer 02-10-2026 | 7:29 PM

COLOMBO (News 1st)  'டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த மலையக மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து கம்பளை வரையிலான ரயில் போக்குவரத்து இன்று (02) ஆரம்பிக்கப்பட்டது.

மலையக மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து கம்பளை வரையிலான ரயில் போக்குவரத்து 302 நாட்களின் பின்னரே இடம்பெறுகின்றது.

பேராதனையிலிருந்து கண்டி வரையான ரயில் போக்குவரத்தை ஆரம்பிக்க மேலும் 3 மாதங்கள் வரை தேவைப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் கே. ரவீந்திர பத்மப்ரிய தெரிவித்துள்ளார்.

டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையினால்  எமது நாட்டின் ரயில் மார்க்க கட்டமைப்புக்கு பாரிய சேதம் ஏற்பட்டது.

இதில் மருதானையிலிருந்து கண்டி வரையான ரயில் மார்க்கத்தில் 103 இடங்கள் சேதமடைந்திருந்தன.

இஹல கோட்டே மற்றும் கடுகண்ணாவைக்கு இடையிலான பலன ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியிலேயே அதிகளவான சேதம் ஏற்பட்டிருந்தது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மற்றும் ரயில்வே திணைக்களத்தின் மார்க்க மற்றும் கைத்தொழில் உப திணைக்களம் ஆகியவை இணைந்து கடந்த காலங்களில் ரயில் மார்க்கத்தின் திருத்தப் பணிகளை மிகவும் துரிதமாக முன்னெடுத்திருந்தன.

தற்போது கொழும்பிலிருந்து கம்பளை வரையான மார்க்கம் ரயில் போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

இன்று (02) அதிகாலை 5.55 க்கு கொழும்பு கோட்டையிலிருந்து 'பொடி மெனிகே' ரயில் பேராதனையை நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ரம்புக்கணை ரயில் நிலையத்தில் வைத்து இந்த ரயிலில் ஏறியிருந்தார்.

ரயில் மார்க்கத்தை திருத்தியமைக்கும் பணிகளில் இணைந்திருந்த பொறியியலாளர்கள் மற்றும் ஊழியர்களும் இந்த பரீட்சார்த்த ரயிலில் பயணித்தமை விசேட அம்சமாகும்.

மலையக ரயில் மார்க்கத்தில் அதிகளவான சேதம் ஏற்பட்ட பலன ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் ரயில் நிறுத்தப்பட்டு அங்கு நிர்மாணப் பணிகள் கண்காணிக்கப்பட்டன.

ரயில் பேராதனை ரயில் நிலையத்தை வந்தடைந்ததன் பின்னர் விசேட வரவேற்பு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று (02) முதல் விசேட நேர அட்டவணையின் கீழ் கொழும்பு கோட்டையிலிருந்து கம்பளை வரை ரயில் போக்குவரத்து இடம்பெறவுள்ளது.

மலையக ரயில் மார்க்கத்தில் பேராதனையிலிருந்து கண்டி வரையான பகுதியின் ரயில் போக்குவரத்து எதிர்வரும் 3 மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கம்பளையிலிருந்து பதுளை வரையான பகுதியை அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதமளவில் ரயில் போக்குவரத்திற்காக இணைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் கே. ரவீந்திர பத்மப்ரிய தெரிவித்தார்.

நானுஓயா - பதுளை வரையான ரயில் போக்குவரத்து கடந்த ஜூன் மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.