.webp)
Colombo (News 1st) உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவிகள், அனுசரணை வழங்கியமை மற்றும் சதித்திட்டம் தீட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் தடுப்புக்காவல் உத்தரவு வழங்கப்பட்டு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே எதிர்வரும் 28ஆம் திகதி வரை சிகிச்சை பெற வேண்டும் என வைத்திய அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்து மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இன்று இதனை குறிப்பிட்டார்.
சுரேஷ் சலேவின் உடல்நிலை குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்காமை மற்றும் ஐவரடங்கிய மருத்துவ அதிகாரிகள் குழுவிற்கு அறிக்கைகளை வழங்காமை தொடர்பில் செப்டம்பர் 22ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகி விடயங்களை தெளிவுபடுத்துமாறு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடந்த வழக்கு தவணையின் போது அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய வைத்தியசாலை பணிப்பளர், டொக்டர் சம்பத் இந்திக குமார, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்ததுடன் அவர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தார்.
மேற்கோள் ஆரம்பம்
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்
தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் அரச அதிகாரி என்பதால் அவர் சார்பில் ஆஜராகுமாறு சட்ட மாஅதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கமைய நான் ஆஜராகின்றேன். ஆனால், கடந்த முறை இதுவொரு மருத்துவச் சதி என நான் குறிப்பிட்டேன். நான் இப்போதும் அதே நிலைப்பாட்டில் இருந்துகொண்டே இந்த விடயங்களை முன்வைக்கின்றேன்.மேற்கோள் நிறைவு
நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் சுரேஷ் சலே தனது கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினியின் கடவுச்சொற்களை விசாரணை அதிகாரிகளுக்கு இன்னும் வழங்கவில்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்தார்.
மேற்கோள் ஆரம்பம்
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்
அந்த கடவுச்சொற்கள் தனக்கு நினைவில் இல்லை என்ற நிலைப்பாட்டில் அவர் உள்ளார். தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானியொருவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான விடயம் ஞாபக சக்தி. அப்படிப்பட்ட ஞாபகசக்தி கூட இல்லாத நபர் இவர். 40 இலட்சம் ரூபா அரச நிதியை பயன்படுத்தி அவரது இதயத்திற்கு உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது அவர் 42ஆவது நோயாளர் விடுதியில் உள்ளார். நாம் விடயங்களை நீதிமன்றத்திற்கு அறிவித்த பின்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதுவரை தீவிர சிகிச்சை பிரிவிலேயே இருந்தார். தற்போது அவரது பற்களுக்கே சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது பற்கள் இதயத்துடன் தொடர்புபட்டுள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தடுப்புக்காவல் உத்தரவைப் பயன்படுத்தி அவர் சொகுசு வாழ்க்கை அனுபவிக்கிறார். ஆனால், 28ஆம் திகதிக்கு பின்னர் அடுத்து என்ன செய்வதென ஆராய்ந்து வருகிறோம். 28ஆம் திகதிக்கு பின்னர் அவரை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச்சென்று வழக்கமான விசாரணைகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம்.மேற்கோள் நிறைவு
அவர் தற்போது இருதய நோய் தொடர்பான நோயாளர் விடுதியில் உள்ளாரா என நீதவான் வினவியதுடன், இருதயம் தொடர்பான சிகிச்சைகள் முடிந்துவிட்டதாக திலீப பீரிஸ் தெரிவித்தார்.
ஏனைய நோயாளிகளுக்கும் பல்வலிக்கு இதுபோன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறதா என நீதவான் வினவினார்.
மேற்கோள் ஆரம்பம்
டொக்டர் சம்பத் இந்திக குமார
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர்
அது தொடர்பில் நானும் அறிந்திருக்கவில்லை. நானும் அது குறித்து கேள்வி எழுப்பினேன். எனினும், தற்போது வழங்கப்படும் நோயெதிர்ப்பு மருந்துகள் வழங்கப்படவில்லை என்றால் நரம்புகளில் அடைப்பு தொடர்பான சிக்கல் ஏற்படும் என்பதையே வைத்திய அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். அதனுடன் தொடர்புடைய சிகிச்சைகள் முடிந்தவுடன் பொருத்தமான சூழலுக்கு அவரை விடுவிக்க தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.மேற்கோள் நிறைவு
மருத்துவ அறிக்கையில், சுரேஷ் சலே சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளதாக சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
அந்த மருத்துவ அறிக்கையில் அவர் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன், சித்திரவதைக்கு உள்ளானதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை என நீதவான் இதன்போது தெரிவித்தார்.
மேற்கோள் ஆரம்பம்
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்
நான் முன்னர் குறிப்பிட்டது போன்றே, எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து எதிர்வரும் நாட்களில் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறோம். இது தொடர்பாக தகவல்களை அறிந்திருந்தால் அவற்றை எம்மிடம் வழங்குமாறு ஊடகவியலாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கோள் நிறைவு
ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ
சுரேஷ் சலேவின் சட்டத்தரணிமேற்கோள் ஆரம்பம்
மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்து அது தொடர்பில் கருத்து தெரிவிக்க எதிர்பார்க்கிறோம். சுரேஷ் சலே புலனாய்வு பிரிவு அதிகாரி என்பதால் அவர் 02 நாட்களுக்கு ஒரு தடவை கடவுச்சொற்களை மாற்றுகிறார். அதனாலேயே ஒரு வாரத்திற்கு முன்பிருந்த கடவுச்சொற்கள் நினைவில் இல்லை என அவர் கூறினார். அதேபோன்று பல மாதங்களுக்கு முன்பிருந்த கடவுச்சொற்கள் எப்படியும் நினைவில் இருக்காது என்பதையும் குறிப்பிட்டார். தற்போது கடவுச்சொற்கள் நினைவில் இல்லாமல் இருப்பது வழமைக்கு மாறான ஒரு நிலையல்ல
மேற்கோள் நிறைவு
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்
மேற்கோள் ஆரம்பம்
குற்றப் புலனாய்வு திணைக்களம் சலேவை கைது செய்த நேரத்தில் இருந்து கடவுச்சொற்கள் பற்றி விசாரித்தது. ஆரம்பத்தில் மடிக்கணினி தனது மகளுடையது என கூறி பின்னர் கடவுச்சொற்களை வழங்காமல் அவர் தொடர்ச்சியாகத் தவிர்த்து வந்தார். அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் அதிகாரியின் சமயோசித புத்தி காரணமாக அந்த மடிக்கணினியை நாம் உடனடியாக எங்கள் பொறுப்பில் எடுத்தோம். இல்லையெனில் அங்கேயும் நழுவிச்செல்லவே அவர் முயன்றார். அவர் கடவுச்சொல்லை வழங்காவிட்டால் அதனைப் பெற்றுக்கொள்ள எங்களுக்கு வழிகள் உள்ளன
மேற்கோள் நிறைவு
அது தொடர்பாக வேறு நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதவான் இதன்போது தெரிவித்தார்.
சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டதுடன், வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
