பல்கலைக்கழக வெற்றிடங்களை நிரப்ப பிரதமர் ஆலோசனை

பல்கலைக்கழக வெற்றிடங்களை நிரப்பவும் பகிடிவதையைத் தடுக்கவும் பிரதமர் ஆலோசனை

by Staff Writer 18-09-2026 | 9:22 AM

COLOMBO (News 1st)

பல்கலைக்கழகங்களில் நிலவும் வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உபவேந்தர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். 
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அலுவல்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனை குழுவின் உயர்கல்வித் துறை தொடர்பான உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். 
இதன்போது அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட வெற்றிடங்களுக்கு இதுவரை நியமனங்கள் வழங்கப்படாமை தொடர்பில் பிரதமர் உபவேந்தர்களிடம் வினவியுள்ளார். 
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் போது பாதிக்கப்பட்ட மாணவர்கள் மத்தியில் அது தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 
பல்கலைக்கழகங்களில் பகிடிவதையை கட்டுப்படுத்துவது தொடர்பான தார்மீகப் பொறுப்பு அதன் நிர்வாகத்தினரையே சாரும் எனவும் பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.