காயமடைந்தவர்களை கொழும்பிற்கு அழைத்து செல்ல ஆயத்தம்

விபத்தில் காயமடைந்தவர்களை விமானம் மூலம் கொழும்பிற்கு அழைத்துச் செல்ல ஆயத்தம்

by Staff Writer 05-09-2025 | 6:31 PM

15 பேரின் உயிர்களை காவுகொண்ட பாரிய பஸ் விபத்து எல்ல - வெல்லவாய வீதியின் ராவணா எல்ல 23ஆம் மைல்கல் பகுதியில் நேற்றிரவு (04)பதிவானது.

தங்காலை நகர சபை ஊழியர்கள் சிலரை அவர்களது உறவினர்களுடன் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற பஸ் வெல்லவாய நோக்கி பயணித்த ஜீப்பொன்றுடன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து நேற்றிரவு(04) 9.15 அளவில் விபத்துக்குள்ளானது.

நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட 32 பேர் பஸ்ஸில் இருந்துள்ளனர்.

குறித்த பஸ் சுமார் 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் இதில் 15 பேர் பரிதாபகரமாக உயிரிழந்தனர்.

இவர்களில் 13 பேர் தங்காலை நகர சபையின் ஊழியர்களாவர்.

உயிரிழந்தவர்களில் 09 பேரின் சடலங்கள் தியத்தலாவை வைத்தியசாலையிலும் 06 பேரின் சடலங்கள் பதுளை வைத்தியசாலையிலும் வைக்கப்பட்டுள்ளன.

விபத்தில் காயமடைந்தவர்களை பார்வையிடுவதற்காக பதுளை மாகாண பொது வைத்தியசாலைக்கு பிரதி அமைச்சர் ருவன் செனரத் இன்று (05)  சென்றிருந்தார்.

விபத்தில் சிக்கியோரை மீட்பதற்காக இராணுவம், பொலிஸ், இடர் முகாமைத்துவ பிரிவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர்.

மீட்புப் பணிகளுக்காக சுமார் 200 இராணுவ வீரர்கள் நேற்றிரவு(04) வரவழைக்கப்பட்டிருந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்களை தேவையேற்பட்டால் விமானம் மூலம் கொழும்பிற்கு அழைத்துச் செல்வதற்கான ஒத்துழைப்பை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வழங்குவதற்காக விமானப்படையின் எம்.ஐ ஹெலிகொப்டரொன்று தியத்தலாவை முகாமிலும் பெல் 412 ரக ஹெலிகொப்டரொன்று வீரவில விமானப்படை முகாமிலும் வைத்திய குழாத்தினருடன் தயார் நிலையில் உள்ளதாக பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார்.

இந்த பஸ் விபத்து தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களம் தெரிவிக்கின்றது.

விபத்து இடம்பெற்ற இடத்துக்கு பதுளை மாவட்ட தலைமை மோட்டார் வாகன பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் விஜயம் செய்துள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கூறினார்.

விபத்து தொடர்பில் அவர்களால் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்த 17 பேரும் அவர்களை காப்பாற்றுவதற்கு சென்ற இருவரும் பதுளை மாகாண பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் நால்வர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதுளை மாகாண பொது வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் கயான் குரே தெரிவித்தார்.