அர்ஜுன் மகேந்திரனுக்கு அழைப்பாணை..

அர்ஜுன் மகேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை

by Staff Writer 23-08-2025 | 9:19 PM

2015 ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி மோசடி வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை செப்டம்பர் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கைக்கமைய, கொழும்பு பிரதம நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க நேற்று(22) இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சிங்கப்பூரில் இருப்பதாக கூறப்படும் அர்ஜுன் மகேந்திரனுக்கு கடந்த ஆண்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்ட போதும் அது முறையாக செயற்படுத்தப்படவில்லையென அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

சந்தேகநபருக்கு ஆங்கில மொழியில் அழைப்பாணையை விடுக்க நடவடிக்கையெடுக்குமாறு நீதிமன்றத்துக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு கோரிக்கை விடுத்தது.

குறித்த கோரிக்கைக்கமைய பிரதம நீதவான் இந்த அழைப்பாணையை பிறப்பித்தார்.

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியில் முன்னெடுக்கப்பட்ட முறிகள் ஏலத்தின் போது பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்திற்கு 10 பில்லியன் ரூபாய்க்கு அதிக மதிப்பிலான முறிகளை விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்தது.