பண்டாரகம துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

மாகந்துரே மதூஷுடன் நெருங்கி செயற்பட்ட சிறைச்சாலை பாதுகாவலரே பண்டாரகம துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிப்பு

by Staff Writer 22-08-2025 | 10:11 AM

Colombo (News 1st) ஹொரணை - பாணந்துறை பிரதான வீதியை அண்மித்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபர், மாகந்துரே மதூஷ் எனப்படும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியுடன் நெருங்கி செயற்பட்ட ஒருவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் களுத்துறை சிறைச்சாலையின் பாதுகாவலராக கடமையாற்றிய போது முன்னறிவிப்பின்றி வௌிநாடு சென்றமையால் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாணந்துறை தெற்கு - பிங்வல பகுதியைச் சேர்ந்த 57 வயதான கோதாகொட ஆரச்சிகே லலித் குமார கோதாகொட என்பவரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2019ஆம் ஆண்டில் அவர் துபாயிலிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவர் ஹொரணையில் இருந்து பண்டாரகம நோக்கி நேற்று பிற்பகல் 06 மணியளவில் காரில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.