.webp)
நியூசிலாந்தின் துணை பிரதமரும் வௌிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீற்றர்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றிரவு(24) நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
எதிர்வரும் 28ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பாரென வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரையும் நியூசிலாந்தின் துணை பிரதமர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துடன் வர்த்தகம், முதலீடு, விவசாயம், கல்வி, தொடர்பாடல், சுற்றுலா மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைப்புகளை மேம்படுத்துவதற்கான இருதரப்பு கலந்துரையாடல்களிலும் நியூசிலாந்து துணை பிரதமர் ஈடுபடவுள்ளார்.
நியூசிலாந்து துணை பிரதமருடன் அந்நாட்டு வௌிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மூவரும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது.
கடந்த 5 ஆண்டுகளில் நியூசிலாந்தும் இலங்கையும் இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் கணிசமான பங்கை ஆற்றியுள்ளதாக நியூசிலாந்து அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து துணை பிரதமரும் வௌிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீற்றர்ஸின் இந்த விஜயமானது அரசியல் ரீதியில் முக்கியத்துவம் மிக்கதும் இருநாடுகளுக்கிடையிலான உறவின் மேம்பாட்டிற்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதாக அமையுமெனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.