.webp)
Colombo (News1st) அஸ்வெசும பயனாளிகளாகப் பதிவு செய்து தற்போது காத்திருப்போர் பட்டியலிலுள்ள குடும்பங்களுக்கு சலுகை விலையில் உணவுப் பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் இன்று(01) ஆரம்பமாகின்றது.
சித்திரை வருடப் பிறப்பின் போது மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்தத் திட்டம் இன்று முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும்
5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை 50 வீத விலைக்கழிவுடன் 2,500 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
லங்கா சதொச ஊடாக பெற்றுக்கொள்ள முடியாத பகுதிகளிலுள்ள பயனாளிகளுக்கு தெரிவுசெய்யப்பட்ட கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக இந்த சலுகைப் பொதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலிலுள்ள 80,12,753 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நிதியமைச்சு மற்றும் உணவுப் பாதுகாப்பு குழு மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.