.webp)
Colombo (News1st) மியன்மாரில் நில அதிர்வு ஏற்பட்ட பகுதிகளில் தாக்குதல்களை 2 வாரங்களுக்கு இடைநிறுத்தவுள்ளதாக கிளர்ச்சிக்குழுக்கள் அறிவித்தன.
எவ்வாறாயினும் மோதலில் ஈடுபட்டு வரும் ஏனைய தரப்பினரும் தாக்குதல்களை இடைநிறுத்துவதற்கு இணக்கம் தெரிவிப்பதில் சந்தேகங்கள் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மியன்மாருக்கான முதலாவது நிவாரண உதவித்தொகை இன்று வழங்கப்படவுள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் மியன்மாருக்கான அதிகாரி தெரிவித்தார்.
மியன்மாரின் சில பகுதிகளில் நேற்று முன்தினம் பதிவான பாரிய நில அதிர்வால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,600-ஐ கடந்துள்ள நிலையில் பலர் காணாமல் போயுள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
நில அதிர்வால் தாய்லாந்தின் பெங்கோக் நகரில் கட்டடங்கள் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதுடன் 83 பேர் காணாமல் போயுள்ளனர்.
மியன்மாரில் மீட்பு பணிகளுக்காக 49 இராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தாய்லாந்து வௌிவிவகார அமைச்சு தெரிவித்தது.
அவசர மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக 118 இந்திய இராணுவ வீரர்களும் மியன்மாருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதேவேளை பிரித்தானியாவினால் 10 மில்லியன் யூரோ மதிப்பிலான நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.