அமெரிக்க விவசாய திணைக்களத்தின் துணை செயலாளரும் தூதுவரும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

by Staff Writer 26-04-2024 | 7:34 PM

Colombo (News 1st) அமெரிக்க விவசாய திணைக்களத்தின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாயத்துறை துணை செயலாளர் அலெக்ஸிஸ் டெய்லரும் (Alexis Taylor) அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கும் (Julie Chung) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர்.

இலங்கையின் விவசாயத்துறைக்கான அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் ஒத்துழைப்பு தொடர்பில் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையின் விவசாயத்துறை அபிவிருத்தி , பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு வழங்க வேண்டிய அமெரிக்காவின் கடப்பாட்டை, துணைச்செயலாளர் அலெக்ஸிஸ் டெய்லரின் இலங்கை விஜயம் பிரதிபலிப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் உணவு பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு எதிரான நெகிழ்வுத்தன்மையை அதிகரிப்பதனை ஊக்கப்படுத்துவதும் இந்த விஜயத்தின் நோக்கமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் உதவியுடன், கல்வி அமைச்சின் SAVE THE CHILDREN முன்னெடுக்கும் பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் உணவு வழங்கும் திட்டம் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

இந்தத் திட்டத்தின் கீழ் தற்போது ஒரு இலட்சம் மாணவர்களுக்கு நாளாந்த உணவு வழங்கப்படுகின்ற நிலையில், அதனை இரண்டு இலட்சமாக அதிகரிப்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.