மத்திய கிழக்கில் யுத்த நெருக்கடி: இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டதா?

by Bella Dalima 19-04-2024 | 8:03 PM

மத்திய கிழக்கு வலயம் தொடர்பில் தற்போது முழு உலகின் கவனமும் திரும்பியுள்ளது. 

ஈரானின் இஸ்பஹான் நகரில் வெடிச்சம்பவங்கள் கேட்டதாக வெளியாகும் தகவல்களையடுத்து, இந்த நிலைமை தீவிரமடைந்துள்ளது. 

இஸ்ரேல், ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், தமது நாட்டில் எந்தவொரு பகுதி மீதும் வான் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என ஈரானின் ​தேசிய சைபர் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையிலேயே தேசிய பாதுகாப்பு பேரவை இன்று அவசரமாக கூடியுள்ளது. 

மத்திய, கிழக்கு வலயத்தில் அபாயத்தை தோற்றுவிக்கும் வகையில், தற்போது இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான நெருக்கடி யுத்தமாக திரிபடைந்து வருகின்றது.  

வான் பரப்பு ஊடாக மேற்கொள்ளப்படும் ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்கள் ஈரானிலிருந்து இஸ்ரேலுக்கும் இஸ்ரேலிலிருந்து ஈரானுக்கும் மேற்கொள்ளப்படுவதாக அறியக்கிடைக்கின்றது. 

கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் தீவிரம் பெற்ற காஸா நெருக்கடியினை அடுத்தே,  ஈரான் - இஸ்ரேல் மோதல் மத்திய கிழக்கு வலயத்தில் யுத்த அபாயத்தை தோற்றுவித்துள்ளது. 

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவிய பனிப்போர் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. 
 
இஸ்ரேல் மீது  ஈரான் நேற்று ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டமையை அமெரிக்காவின் பாதுகாப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மத்திய, கிழக்கு வலயத்தில் நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் வகையில், கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி ஈரானால் இஸ்ரேலின் டெலிஷ் நகருக்கு ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவின் டமஸ்கஸ் நகரிலுள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுத்தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 

இந்த தாக்குதலில் இஸ்லாமிய புரட்சி பாதுகாப்பு படையணியின் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இருவரும் ஐந்து ஆலோசகர்களும் கொலை செய்யப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அதற்கு முன்னரும் இஸ்ரேலில் ஈரானின் உயர் அதிகாரி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் அவர் கொலை செய்யப்பட்டிருந்தார். 

அதன் பின்னர் சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் பணியாற்றிய ஈரானிய ஜெனரலான ராசி முஸாவி, இஸ்ரேலின் வான் தாக்குதலினால் உயிரிழந்ததாக ஈரானின் அரச ஊடகம் அறிவித்திருந்தது. 

எனினும், கடந்த ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவின் டமஸ்கஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் இஸ்ரேலுக்கு எவ்வித மன்னிப்பையும் வழங்குவதில்லை எனவும் அந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் மேற்கொள்வதாகவும் ஈரான் நேரடியாக அறிவித்ததுடன், இந்த அறிவிப்பு ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. 

இந்த பின்புலத்தில் கடந்த 13 ஆம் திகதி ஈரான் முதற்தடவையாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. 

அதற்கமைய, ஈரான் அண்மையில் இஸ்ரேல் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில், இஸ்ரேல்  ஈரானின் இஸ்பஹான் நகரை அண்மித்த பகுதியில் இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக அமெரிக்காவின் உளவுப் பிரிவை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பினர் இதுவரையில் இது தொடர்பில் எவ்வித கருத்துகளையும் வெளியிடவில்லை. 

ஈரான் - இஸ்ரேல் மோதல் இவ்வாறு வலுப்பெறும் போது, இஸ்ரேல் ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்கு பதிலாக இஸ்பஹான் நகர் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டமையால், முழு உலகமும் மத்திய கிழக்கு வலயம் தொடர்பில் பார்வையை திருப்பியுள்ளன.

ஈரானின் மிகப்பெரிய விமான படைத்தளம் , யுரேனியம் உற்பத்தி நிலையம் , ஏவுகணை முகாம், எரிபொருள் உற்பத்தி , யுரேனியம் ஆய்வுக்கூடம் , சேர்கோனியம் உற்பத்தி நிலையம் என்பன இஸ்பஹான் நகரை கேந்திரமாகக் கொண்டே அமைந்துள்ளன. 

ஈரானின் இஸ்பஹான் சர்வதேச விமான நிலையத்தை அண்மித்த பகுதி மற்றும் இஸ்பஹான் நகரின் கிழக்கு பிரதேசம் மீது இந்த ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதன் பின்னர் ஈரானின் விமான பாதுகாப்பு கட்டமைப்பு செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், இதுவரையில் அந்த இடங்களில்  வெடிப்புகளினால்  ஏற்பட்ட சேத விபரம் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை என ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்பஹான் நகரில் கேட்ட இந்த வெடிப்பு சத்தம் சந்தேகத்திற்கு இடமான பொருளொன்றின் மீது விமான பாதுகாப்பு கட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் என ஈரான் தெரவித்துள்ளது.

இஸ்பஹான் அல்லது நாட்டின் எந்தவொரு பிரதேசத்தின் மீதும் வான் தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என ஈரானின் தேசிய சைபர் பாதுகாப்பு கட்டமைப்பு தெரிவித்துத்துள்ளது. 

சிலர் தமது வான் பரப்பில் ட்ரோன்களை பறக்கச் செய்வதற்கு முயற்சி செய்துள்ளதாகவும் அவ்வாறு அனுப்பப்பட்ட மூன்று ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாகவும் ஈரானின் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

எனினும், இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்கா இன்று காலை அறிவித்தது. 

எவ்வாறாயினும், தாக்குதலின் பின்னர் ஈரானின் தெஹ்ரான், சிராஸ் மற்றும் இஸ்பஹான் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, சில சர்வதேச விமான நிறுவனங்கள் ஈரானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதுடன், தமது விமான பயணப் பாதையையும் மாற்றியுள்ளன. 

கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து flydubai விமான சேவை ஈரானுக்கான விமான ​சேவையை இடைநிறுத்தியுள்ளதுடன்,  Lufthansa விமான சேவை ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தமது விமான பயணத்தை நிறுத்தியுள்ளது. 

இந்த மோதல் இலங்கையை எவ்வாறு பாதிக்கும்? 

2022 ஆம் ஆண்டு மத்திய வங்கி அறிக்கையின் படி 3.8 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் வெளிநாட்டு பணியாளர்களின் மூலம் கிடைத்துள்ளதுடன், அதில் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் பணியாளர்கள் மூலம் 85% வருமானம் கிடைத்துள்ளது. 

ஈரானின் யுத்த கப்பலொன்று இலங்கைக்கு வந்து சென்று ஒரு சில மாதங்களே ஆகின்றன.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்தால், இலங்கையை பாதிக்கும் மற்றுமொரு சம்பவமும் இடம்பெறவுள்ளது. 

எதிர்வரும் 24 ஆம் திகதி இலங்கைக்கு வருவதற்கு திட்டமிட்டுள்ள ஈரான் ஜனாதிபதியின் விஜயம் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. 

இலங்கை கடற்பரப்பின் அமைவிடம் மற்றும் பூகோள அமைவிடத்திற்கு ஏற்ப இவ்வாறான சந்தர்ப்பங்களில் நாம் மிகவும் சிந்தித்து செயற்பட வேண்டும்.

அதனாலேயே மத்திய கிழக்கு வலயத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் ரஷ்யா - உக்ரைன் இடையிலான மோதல் தொடர்பில் சரியான தகவல்களை அறிந்துகொள்ள நாம் கடமைப்பட்டுள்ளோம்.​

ஏனைய செய்திகள்