உற்பத்திக்கு ஏற்றாற்போன்று சம்பளம்: ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்ற பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனம்

by Staff Writer 07-05-2024 | 6:39 PM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனத்திற்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (06) இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு  தொடர்பில் இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என தொழில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதற்காக தாம் ஏற்கனவே முன்வைத்துள்ள உற்பத்திக்கு ஏற்றாற்போன்று சம்பளம் வழங்கும் முன்மொழிவு தொடர்பில் தாம் இதன்போது மீண்டும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் இராஜதுரை நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.

அவ்வாறு செய்தால் ஒரு தொழிலாளிக்கு சுமார் 1800 ரூபா நாளாந்த சம்பளம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், உற்பத்தியும் அதிகரிக்கும் எனவும் அவர் கூறினார்.

இந்த முன்மொழிவு தொடர்பில் ஆராயுமாறு நேற்றைய சந்திப்பின் போது ஜனாதிபதி தொழில் அமைச்சருக்கு பணிப்புரை விடுத்ததாக ரொஷான் இராஜதுரை மேலும் கூறினார்.

இது தொடர்பிலான தீர்மானத்தின் பின்னரே, புதிதாக வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, 1700 ரூபா சம்பள அதிகரிப்பிற்கு எதிராக இதுவரை எவ்வித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படவில்லை என தொழில் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு தெரிவித்தார்.