மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நன்கொடை வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம்

by Bella Dalima 07-05-2024 | 4:23 PM

Colombo (News 1st) மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நன்கொடை வழங்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.  

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மன்னார் பொது வைத்தியசாலையின் விபத்து, அவசர சிகிச்சை பிரிவிற்கான கட்டட நிர்மாண பணிகளுக்கும், மருத்துவ உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்குமாக 600 மில்லியன் ரூபா நன்கொடை பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸின்  வழிகாட்டலுக்கமைய, மாகாண சபையால் திட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டு சுகாதார அமைச்சின் ஊடாக கொழும்பில் உள்ள இந்திய  உயர்ஸ்தானிகராலயத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய அரசாங்கம் 600  மில்லியன் ரூபா நன்கொடை வழங்குவதற்கு இணங்கியுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.