MTV ஊடக வலையமைப்பிற்கு விசேட விருது..

ABU பொதுச்சபை மாநாட்டை நடாத்தும் வாய்ப்பை உறுப்பினர்களின் பெரும்பான்மை இணக்கப்பாட்டின் அடிப்படையில் MTV ஊடக வலையமைப்பு வசம்

by Staff Writer 02-11-2026 | 9:18 AM

COLOMBO (News 1st) உலகின் மிகப்பெரிய ஊடக அமைப்பான ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் பொதுச்சபை மாநாட்டிற்கு இணையாக நாட்டின் முன்னணிக் கலைஞர்கள் பங்கேற்கும் இசை நிகழ்ச்சியொன்றும் இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில் இன்றிரவு (02)  நடைபெறவுள்ளது. 

பல்வேறு நாடுகளின் கலாசார அம்சங்களை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்வுகளும் இதன்போது இடம்பெறவுள்ளன. 

உலகின் மிகப்பெரிய ஊடக அமைப்பான, ABU எனப்படும் ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் 63ஆவது பொதுச்சபை மாநாடு நேற்று (01) COLOMBO CINNAMON LIFE , CITY OF DREAMS ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. 

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வருகையுடன் மாநாட்டின் நிகழ்வுகள் ஆரம்பமாகின. 

70 இற்கும் மேற்பட்ட நாடுகள், பிராந்தியங்களை உள்ளடக்கிய ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் 230 இற்கும் மேற்பட்ட இல்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். 

சமாதானம் மற்றும் மனிதநேயத்திற்கான ஊடகம் -  உண்மை, நம்பிக்கை மற்றும் மாற்றம் எனும் தொனிப் பொருளில் இம்முறை மாநாடு நடைபெறுகின்றது. 

ABU 63ஆவது பொதுச்சபை மாநாட்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகள் எதிர்வரும் 3ஆம் திகதி வரை COLOMBO CINNAMON LIFE , CITY OF DREAMS ஹோட்டல் மற்றும் இரத்மலானை ஸ்டெய்ன் கலையகத்தில்  நடைபெறவுள்ளன. 

உலகின் மிகப்பெரிய ஊடக அமைப்பான ஆசிய பசுபிக் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் பொதுச்சபை மாநாட்டை நடாத்தும் வாய்ப்பை  உறுப்பினர்களின் பெரும்பான்மை இணக்கப்பாட்டின் அடிப்படையில் தனியார் ஊடக வலையமைப்பான சிரச பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

MICE டுவரிசம் எனப்படுகின்ற  கூட்டங்கள், ஊக்குவிப்புப் பயணங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் சார்ந்த சுற்றுலாத்துறையை   மேம்படுத்துவதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.