தீவிரமடையும் முரசு புயல்..

முரசு புயல் தீவிர புயலாக வலுவடையக்கூடும்

by Staff Writer 02-11-2026 | 10:07 AM

COLOMBO (News 1st) வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள முரசு புயல், மேலும் வலுவடைந்து தீவிர புயலாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதனால் மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளுக்கு மறு அறிவித்தல் வரை செல்வதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

முரசு புயல் காங்கேசன்துறையிலிருந்து சுமார் 480 கிலோமீற்றர் தூரத்தில் தற்போது நிலைகொண்டுள்ளது. 

இது இன்று (02) நள்ளிரவுக்கும் நாளை (03) அதிகாலைக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆந்திரப் பிரதேசம் ஊடாக இந்தியாவிற்குள் ஊடறுக்கும் என திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று (02) பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் இடைக்கிடையே மழைப் பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சப்ரகமுவ, மத்திய, மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலையினால் 19 மாவட்டங்களை சேர்ந்த 21,356 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5800 குடும்பங்களை சேர்ந்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதிக மழையுடனான வானிலையினால் 3 பேர் உயிரிழந்துள்ளடன் 06 காணாமல் போயுள்ளனர்.

08 வீடுகள் முழுமையாகவும் 737 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்து நிலையம் குறிப்பிட்டுள்ளது.