கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை

கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று (04) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

by Staff Writer 04-10-2026 | 10:06 AM

COLOMBO (News 1st) நீதிமன்ற பிடியாணை பெற்றுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் இன்று (04) கொழும்பு இலக்கம் 1 நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தீனியவல ஆரண்ய சேனாசனை ஒன்றில் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலைமறைவாகியிருந்த காலப்பகுதியில் அவர் சிம் அட்டைகளையும் வாகனங்களையும் மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பித்திருந்தது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போனமை தொடர்பான வழக்கு 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது அனுமதியின்றி நீதிமன்றில் கருத்து தெரிவித்தமை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட 04 குற்றச்சாட்டுக்களுக்காக ஞானசார தேரர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டார்.

இதன்படி, 2018 ஓகஸ்ட் 08ஆம் திகதி ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததுடன், அந்தத் தண்டனையை 6 ஆண்டுகளில் அனுபவித்து முடிக்கும் வகையில் உத்தரவை பிறப்பித்தது.

எவ்வாறாயினும், அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பு அரசியலமைப்பிற்கு முரணானது எனக் குறிப்பிட்டு, அந்த தீர்ப்பை வலுவற்றதாக்குமாறு கோரி ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட உள்ளிட்ட தரப்பினர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தனர்.

தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட  உயர்நீதிமன்றம், கடந்த செப்டம்பர் 10ஆம் திகதி குறித்த ஜனாதிபதிப் பொதுமன்னிப்பை வலுவற்றதாக்கித் தீர்ப்பளித்தது.

உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஞானசார தேரருக்கு எதிரானத் தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் விடயங்களை முன்வைத்து மனுத்தாரர்கள் தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரம்  மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த  கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால், அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.