COLOMBO (News 1st):
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இன்று (03) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அத்துடன் அவரை இன்றைய தினம் ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது தப்பியோடிய டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் நேற்று (02) கைது செய்யப்பட்டார்.
கிடைத்த தகவலுக்கமைய யாழ்ப்பாண குற்றத்தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்த விசேட சுற்றிளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் டிக்கோயா நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் வயோதிப தம்பதியினர் சடலங்களாக கடந்த மே மாதம் 21ஆம் திகதி மீட்கப்பட்டனர்.
கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், குறித்த தம்பதியினரிடமிருந்து 18பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த நிலையில் தப்பியோடி தலைமறைவாக இருந்தார்.
82 வயதான முதியவரும் அவரின் 82 வயதான மனைவியுமே கொலை செய்யப்பட்டனர்.
இதற்கமைய சம்பவத்துடன் தொடர்புடைய பதுளை தெமோதரை பகுதியைச் சேர்ந்த 37 வயதான சந்தேகநபர், பொகவந்தலாவை பகுதியில் மறைந்திருந்த நிலையில் மே மாதம் 23ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதன்பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர், சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தப்பியோடியிருந்தார்.
இதற்கமைய, கடந்த சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட தொடர் விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் யாழ்ப்பாணம் சந்தை வளாகத்தில் நேற்று (02) கைது செய்யப்பட்டார்.