வலுவடையும் குறைந்த காற்றழுத்தப் தாழ்வுப் பகுதி..

வங்காள விரிகுடாவின் அந்தமான் கடற்பகுதியை அண்மித்த பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் தாழ்வுப் பகுதி, எதிர்வரும் சில நாட்களில் மேலும் வலுவடையும்

by Staff Writer 21-09-2026 | 10:39 AM

COLOMBO (News 1st) நாட்டின் வடகிழக்கு பகுதியில், வங்காள விரிகுடாவின் அந்தமான் கடற்பகுதியை அண்மித்த பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தப் தாழ்வுப் பகுதி,  எதிர்வரும் சில நாட்களில் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

குறைந்த காற்றழுத்த பகுதியின் நேரடி தாக்கம் இலங்கைக்கு ஏற்படாது என வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த பகுதியை நோக்கி வீசும் காற்று  காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.

அத்துடன், சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன் வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 02 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடமத்திய  வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.