.webp)
.jpg)
Colombo (News 1st) மகளிருக்கான ஆசிய கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது.
இதற்கான அரைஇறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகளால் இலங்கை அணி வெற்றிகொண்டது.
துபாயில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 130 ஓட்டங்களைப் பெற்றது.
இறுதி வரை ஆட்டமிழக்காத அணித்தலைவி பாத்திமா சனா 36 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பௌண்டரிகளுடன் 47 ஓட்டங்களை பெற்றார்.
பந்துவீச்சில் சமரி அத்தபத்து, சமுதி பிரபோதா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சுகந்திகா குமாரி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
வெற்றி இலக்கான 131 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை மகளிர் அணி 1.3 ஓவர்களில் 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்திற்குள்ளானது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணித்தலைவி சமரி அத்தபத்து 5 ஓட்டங்களுடனும் சஞ்சனா காவிந்தி ஓட்டமின்றியும் ஆட்டமிழந்தனர்.
எனினும், மற்றைய ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனையான இமேஷா துலானி 24 ஓட்டங்களைப் பெற்று ஆறுதல் அளித்தார்.
33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட நிலையில் இணைந்த ஹர்சிதா சமரவிக்ர மற்றும் கவிஷா தில்ஹாரி ஜோடி பொறுப்பை உணர்ந்து அபாரமாகத் துடுப்பெடுத்தாடி வெற்றிக்கு வித்திட்டது.
இவர்கள் 5ஆம் விக்கெட்டுக்காக 59 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஹர்சிதா சமரவிக்ரம 2 பௌண்டரிகளுடன் 36 ஓட்டங்களையும் கவிஷா தில்ஹாரி 4 பெண்டரிகளுடன் 33 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை மகளிர் அணி 17 ஓவர்களில் 109 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
அதன்படி இலங்கை வெற்றிபெற கைவசம் 4 விக்கெட்டுகள் இருக்க 18 பந்துகளில் 22 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
நிலக்ஷிகா சில்வா 10 பந்துகளில் 3 பௌண்டரிகளுடன் 18 ஓட்டங்களையும் கவுசினி நுத்யங்கனா 4 பந்துகளில் ஒரு சிக்ஸருடன் 10 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர்.
இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் நாளை இரவு மோதவுள்ளன.
