.webp)
-560269.jpg)
Colombo (News 1st) நாட்டின் நீண்டகால பொருளாதார மீட்சிக்கு நிதி ஸ்திரத்தன்மையை மறுசீரமைப்பது அத்தியாவசியமாகும் எனவும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.
பொருளாதார நெருக்கடி நிலைமையை அடுத்து நிதி ஸ்திரத்தன்மையை மறுசீரமைப்பதற்காக முன்னெடுக்கப்படும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி திட்டத்தில் பிரதானமாக வருமான அடிப்படையிலான நிதி ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டின் நிதி சார் நடவடிக்கைகள் கணிசமாக முன்னேற்றமடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான வரி வருமானம் 2025 இல் 15.04 சதவீதமாக பதிவாகியுள்ள நிலையில் அது இருமடங்கிற்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி மற்றும் கொள்கை மாற்றங்களின் தாக்கங்களில் இருந்து வறியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்காக சமூக பாதுகாப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதும் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய செயற்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வறுமையைக் குறைப்பதை இலக்காகக் கொண்ட 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் வரம்பையும் இலக்குகளையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஒரு சிறந்த ஆரம்பம் என சுட்டிக்காட்டிய சர்வதேச நாணய நிதிய பேச்சாளர், சமூகச் செலவினங்களை பாதுகாப்பதற்காக குறித்த திட்டத்தில் குறைந்தபட்ச சமூகச் செலவின வரம்பும் இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
எதிர்காலத்தில் பொருளாதார மீள்தன்மையை கட்டியெழுப்பவும், வணிகச் சூழலை மேம்படுத்தவும், வரிமுறைமையை பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவானதாக மாற்றவும் வருமானத் திரட்டலை தொடர்ந்து பேணுவது மிக முக்கியமானது என பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதற்காக நடுத்தர கால வருமான மூலோபாய திட்டமொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது அவசியமாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
போதியளவான நிதி கையிருப்புகளையும் வலுவான நிதி ஸ்திரத்தன்மையையும் பேண வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, வரி விதிப்பு மற்றும் வரி சலுகைகளை மிகவும் எச்சரிக்கையுடன் தொடர்ந்தும் பேண வேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
