.webp)

Colombo (News 1st) நேபாளம் - திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 165ஆக அதிகரித்துள்ளதுடன் வௌிநாட்டு பிரஜைகள் அடங்கலாக சுமார் 1,500 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் 28 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இதில் அடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் அதிகளவான யாத்திரிகர்கள் மற்றும் மலையேறும் வீரர்கள் இருந்த பகுதியிலேயே நேற்று(26) திடீர் மண்சரிவு மற்றும் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் திடீர் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சுமார் 08 தொன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நேபாள பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உலக நாடுகள் பல முன்வந்துள்ளன.
திபெத் எல்லை பகுதிகளில் ஆபத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக ட்ரோன்கள், 3D லேசர் ஸ்கேனர்கள் மற்றும் மீட்புக் கருவிகளுடன் அவசர கால பதிலளிப்பு அதிகாரிகளை கொண்ட குழுவை சீன ஜனாதிபதி ஈடுபடுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனைத்து வகையான மனிதாபிமான உதவிகளையும் வழங்க தயாராகவிருப்பதாக தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 10 தொன் நிவாரணப் பொருட்கள் அடங்கிய விமானத்தை நேற்றிரவு நேபாளத்திற்கு அனுப்பி வைத்ததாக கூறியுள்ளார்.
தற்காலிக தங்குமிடங்கள், குடிநீர் மற்றும் துப்புரவு பணிகளுக்காக 05 இலட்சம் அமெரிக்க டொலர்களை நேபாளத்திற்கு வழங்குவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தான், பிரித்தானியா மற்றும் கனேடிய பிரதமர்கள் மீட்பு பணிகளுக்கு தேவையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
