WhatsApp கணக்குகள் ஊடுருவி ZeroClick தாக்குதல்

Apple தொலைபேசிகளை பயன்படுத்துவோரின் WhatsApp கணக்குகளை ஊடுருவும் நபர்கள்

by Staff Writer 12-08-2026 | 3:14 PM

Colombo (News 1st) Apple கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவோரின் WhatsApp கணக்குகளை கைப்பற்றும் புதிய சைபர் தாக்குதல் தொடர்பில் இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. 

Zero-Click என அழைக்கப்படும் இந்த செயற்பாடு iOS 16 பதிப்பை சேர்ந்த ஐபோன்களில் (iPhone) உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படுவதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. சைபர் 

தாக்குதலுக்கு உள்ளான பலர் தற்போது அது தொடர்பில் முறைப்பாடுகளை அளித்துள்ளதாகவும் இதற்கமைய Zero-Click WhatsApp பாதுகாப்பு மீறல் நாட்டில் இடம்பெற்று வருவதாகவும் இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. 

இத்தாலியை சேர்ந்த பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வுக்கு அமைய  WhatsApp Linked Device Synchronization (ஸின்க்ரோனைசேஷன்) செயன்முறையில் தாக்கம் செலுத்தும் பல பாதுகாப்பு பலவீனங்களை ஒன்றிணைத்து பயன்படுத்தி ஹேக்கர்களினால் (Hackers) இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படுகின்றது என சந்தேகிக்கப்படுவதாக அந்த பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன் தமது  WhatsApp கணக்குகளினூடாக பணம் கோரி அனுப்பப்பட்ட மோசடியான குறுஞ்செய்திகள் தொடர்பில் தெரியவந்துள்ள போதிலும் கணக்கின் செட்டிங்ஸ் (Settings) பகுதியில் சந்தேகத்திற்கிடமான எவ்வித மாற்றங்களும் காணப்படவில்லை என சைபர் தாக்குதலுக்கு இலக்கான நபர்கள் தெரிவித்துள்ளனர். 

எனவே ஐபோன் பாவனையாளர்கள் உடனடியாக தங்களது இயங்குதளத்தை (iOS) புதிய பதிப்பிற்கு அப்டேட் (Update) செய்து கொள்ளுமாறும்  WhatsApp செயலியின் புதிய பதிப்பை நிறுவி கொள்ளுமாறும் இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு அறிவித்துள்ளது. 

இதற்கு மேலதிகமாக Two-Step Verification மற்றும் Chat Lock ஆகிய வசதிகளை செயற்படுத்தி கொள்ளுமாறு அறிவித்துள்ள இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு வழமைக்கு மாறான பணக்கோரிக்கைகள் விடுக்கப்பட்டால் அதனை நம்பகமான வேறு தொடர்பாடல் ஊடகங்களின் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு பாவனையாளர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.