ஷிரான் பாசிக்கிற்கு வெளிநாடுகளில் சொத்துக்கள்

போதைப்பொருள் கடத்தல்காரர் ஷிரான் பாசிக்கிற்கு வெளிநாடுகளில் பெறுமதி வாய்ந்த சொத்துக்கள்

by Staff Writer 26-08-2026 | 9:32 AM

COLOMBO (News 1st) தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவருக்கு சுவிட்சர்லாந்து, இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் ஹோட்டல்கள், வாகனங்கள் உள்ளிட்ட சொத்துக்கள் இருப்பதாக தகவல்கள் வௌிக்கொணரப்பட்டுள்ளன. பொலிஸ் மத்திய குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் போதே சந்தேகநபரிடமிருந்து இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. சந்தேகநபரான ஷிரான் பாசிக் குறித்த நாடுகளுக்குப் பயணம் செய்து அந்த வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபருக்கு துபாயில் ஒன்றரை கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஜீப் வண்டியொன்று இருப்பதும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சந்தேகநபருக்கு நாட்டிலுள்ள பல சொத்துக்கள் தொடர்பிலும் கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அவற்றில் கொழும்பு, மரைன் டிரைவ் வீதியில் அமைந்துள்ள சில ஹோட்டல்கள் மற்றும் பொரலஸ்கமுவ பகுதியிலுள்ள தொலைபேசி விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட சொத்துக்களும் அடங்குகின்றன. அவர் தற்போது கொழும்பு மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் பொறுப்பில் தடுத்து வைக்கப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.