ஜனாதிபதி அனுர இந்தியா நோக்கி பயணம்

ஜனாதிபதி அனுர இந்தியா நோக்கி பயணம்

by Staff Writer 17-02-2026 | 7:04 PM

Colombo (News 1st) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று(17) பிற்பகல் இந்தியாவிற்கு பயணமானார்.

AI Impact Summit-இல் பங்கேற்பதற்காக ஜனாதிபதி இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

செயற்கை நுண்ணறிவை மனித குலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த மாநாடு புதுடில்லியின் பாரத் மண்டபத்தில் நடைபெறுகின்றது.  

05 நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும் 45-இற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

அரச தலைவர்களுக்கான மாநாடு நாளை மறுதினம்(19) ஆரம்பமாகவுள்ளதுடன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அன்றைய தினம் மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி, பிரேஸில் ஜனாதிபதி, ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி முடிக்குரிய இளவரசர் உள்ளிட்ட தரப்பினரும் மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.

அத்துடன் பூட்டான், ஸ்பெய்ன், குரேஷியா, எஸ்தோனியா, பின்லாந்து, நெதர்லாந்து, சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்கள் மற்றும் துணை ஜனாதிபதிகள் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் எதிர்கால பயணம் மற்றும் உலகளாவிய சவால்களை முறியடிக்க அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த மாநாடு 2023 ஆம் ஆண்டு முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மாநாடு எனும் பெயரில் பிரித்தானியாவில் நடைபெற்றதுடன், 2024ஆம் ஆண்டில் தென் கொரியாவின் "சியோல் மாநாடு" எனும் பெயரில் நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு பிரான்ஸின் பாரிஸில் 'AI action summit' எனும் பெயரில் இடம்பெற்றது.

இந்த ஆண்டு மாநாட்டிற்கு தொழில்நுட்ப நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கூகுள் பிரதம நிறைவேற்றதிகாரி சுந்தர் பிச்சை, ChatGPT OPEN AI நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி மற்றும் ENVIDIA நிறுவனத்தின் நிறுவுனர் ​ஜென்சன் ஹூவான்க் ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர்.

மைக்ரோ சொப்ட் நிறுவுனர் பில் கேட்ஸ் மற்றும் இந்தியாவின் செல்வந்தரான முகேஷ் அம்பானியும் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.