.webp)
-608931-553216.jpg)
Colombo (News1st) அண்மைக்காலமாக பல்வேறு தரப்பினர் நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கும், நீதிபதிகளுக்கும் எதிராக போலியான மற்றும் அடிப்படையற்ற விமர்சனங்களை முன்வைத்து, அவற்றை சமூக ஊடகங்கள் மற்றும் ஏனைய ஊடகங்கள் வாயிலாகப் பரப்புவதற்கு மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து நீதிச் சேவைகள் சங்கம் தனது கடும் அவதானத்தைச் செலுத்தியுள்ளது.
மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் நீதிவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளைக் கொண்ட அமைப்பாக இந்த நீதிச் சேவைகள் சங்கம் காணப்படுகிறது.
போலியான மற்றும் அடிப்படையற்ற விமர்சனங்களை சமூகமயப்படுத்துவதன் மூலம், நீதித்துறையின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைச் சீர்குலைப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக நீதிச் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தி நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு, இலக்கு வைக்கப்பட்ட ஒரு திட்டமிட்ட அழிவு முயற்சி முன்னெடுக்கப்படுகிறதா என்பது குறித்து தாங்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான முயற்சிகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு நீதிச் சேவைகள் சங்கம் ஒருபோதும் தயங்காது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111 சி பிரிவின் விதிகளுக்கமைய நீதிச் சேவை ஆணைக்குழுவின் தீர்மானங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தலையிடுவதும் 2024 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது நிறுவனத்தை அவமதித்தல் சட்டத்தின் விதிகளுக்கமைய நீதிபதிகளை அவமதித்தல் சிறைத்தண்டனைக்குரிய குற்றங்களாகும் என்பது குறித்தும் தமது சங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக நீதிச் சேவைகள் சங்கம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
