.webp)
Colombo (News 1st) உலக உணவு தினம் இன்றாகும்.
'சிறந்த உணவுகள் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக கைகோர்த்தல்' எனும் தொனிப்பொருளில் இம்முறை உலக உணவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
1979 ஒக்டோபர் 16ஆம் திகதி உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நிறுவப்பட்ட தினத்திலிருந்து இந்த உலக உணவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
உலகளவிய ரீதியில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை 820 மில்லியனை தாண்டியுள்ளதாக உலக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சனத்தொகையில் ஒன்பது பேரில் ஒருவர் பசியால் வாடுவதாக கூறப்படுகின்றது.
அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கைக்கமைய, உலகில் 02 பில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பின்றி வாழ்வதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதைத் தடுக்க நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதை ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
15 வயதுக்குட்பட்ட சிறார்கள், ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உலகில் 5 வயதுக்குட்பட்ட 149 மில்லியன் சிறார்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பெருந்தோட்ட மற்றும் நகர்ப்புற சமூகங்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக காணப்படுவதாக சுகாதார அமைச்சின் போஷாக்கு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் மோனிக்கா விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையின் மரக்கறிகளில் 20 முதல் 30 வீதம் வரையிலும் பழங்களில் 20 வீதம் வரையிலும் வீணாவதாக விவசாய அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய அறுவடைக்கு பிந்திய முகாமைத்துவ நிறுவகம் தெரிவித்துள்ளது.