''அமைதி திட்டத்திற்கு இஸ்ரேல், ஹமாஸ் இணக்கம்''

அமைதி திட்டத்தின் முதல் கட்டத்திற்கு இஸ்ரேல், ஹமாஸ் இணக்கம் - டொனால்ட் ட்ரம்ப்

by Staff Writer 09-10-2025 | 9:00 AM

Colombo (News 1st) இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தில் உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அனைத்து பணயக்கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள் எனவும் இஸ்ரேல் தமது படையினரை மீள அழைத்துக்கொள்ளும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரூத் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கும் இஸ்ரேல் மற்றும் அதனை சூழவுள்ள நாடுகள் மற்றும் அமெரிக்காவிற்கு சிறந்த நாள் எனவும் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அமைதி பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகித்த கட்டார், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி நாளைய தினத்திற்குள் எகிப்துக்கு பயணிக்கவுள்ளதாக வௌ்ளை மாளிகை அறிவித்துள்ளது.

காஸாவில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக ஹமாஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன் இஸ்ரேல் இந்த ஒப்பந்தத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி மற்றும் தொடர்புபட்ட நாடுகளை ஹமாஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து அறிக்கை வௌியிட்டுள்ள இஸ்ரேல் பிரதமர், இஸ்ரேலுக்கான சிறந்த நாள் என குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவும் பணயக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வருவதற்காக நாளை அரசாங்கத்தை கூட்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்க ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்புகொண்ட இஸ்ரேல் பிரதமர், டொனால்ட் ட்ரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் தலைமைத்துவத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

காஸா பகுதியில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக அமெரிக்கா 20 அம்ச ஒப்பந்தத்தை அண்மையில் அறிவித்திருந்தது.

இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துதல், காஸா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 பணயக்கைதிகள் மற்றும் உயிரிழந்த பணயக்கைதிகளின் சடலங்களை விடுவித்தல் மற்றும் காஸா பகுதியில் இருந்து ஹமாஸை முழுமையாக மீளப்பெறுதல் உள்ளிட்டவை அடங்குகின்றன.

இஸ்ரேல் மற்றும் காஸா இடையிலான போர் ஆரம்பமாகி 02 வருடங்கள் பூர்த்தியான நிலையில் அமைதி திட்டத்திற்கான பேச்சுவார்த்தை கடந்த திங்கட்கிழமை முதல் எகிப்தில் நடைபெற்று வந்தது.

2023 ஒக்டோபர் 07ஆம் திகதி இஸ்ரேல் - ஹமாஸ் போர் ஆரம்பமானது.

இந்த தாக்குதல்களில் இதுவரை 67,000-இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.