கோட்டாபய லலித், குகன் வழக்கில் சாட்சியமளிக்க தயார்

கோட்டாபய ராஜபக்ஸ லலித், குகன் வழக்கில் சாட்சியமளிக்க தயார் -சட்டத்தரணிகள் அறிவிப்பு

by Staff Writer 30-07-2025 | 7:04 PM

Colombo (News 1st) காணாமலாக்கப்பட்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பில் அவர்களுடைய உறவினர்களால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்கத் தயாரென முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவரது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு இன்று(30)  அறிவித்தார்.

விடயம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு, உயர் நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பாதுகாப்பு காரணங்களால் தனது சேவைபெறுநர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பது கடினம் என இதன்போது கோட்டாபய ராஜபக்ஸ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்தார்.

இதன் காரணமாக கொழும்பிலுள்ள நீதிமன்றமொன்றில் தனது சேவைபெறுநர் சாட்சியமளிக்க தயார் என ஜனாதிபதி சட்டத்தரணி இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதால், இன்றிலிருந்து 04 வாரங்களுக்குள் கோரிக்கையை குறித்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்து பொருத்தமான உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவிற்கு அறிவித்தது.

2011ஆம் ஆண்டு டிசம்பர் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு 2019ஆம் ஆண்டு அவ்வேளையில் பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டது.

பாதுகாப்பு காரணங்களால் யாழ்.நிதீமன்றத்தில் சாட்சியமளிக்க முடியாது என கோட்டாபய ராஜபக்ஸ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கோட்டாபய ராஜபக்ஸவிற்கு விடுக்கப்பட்ட அறிவித்தலை செல்லுபடியற்றதாக்கி எழுத்தாணை பிறப்பித்தது.