தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் குழு மோதல்..

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களிடையே மோதல்

by Staff Writer 16-07-2025 | 3:06 PM

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அனைத்து பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகத்தில் நேற்று(15) இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் பொறியியல் பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களே அதிகளவில் தொடர்புபட்டிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் எம்.ஐ.நௌபர் நியூஸ் ஃபெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

அத்துடன் பொறியியல் பீட முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் பிரவேசிக்க மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி கற்கும் சில மாணவர்களிடையே நேற்று இடம்பெற்ற கைகலப்பில் காயமடைந்த 04 மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக அம்பியூலன்ஸ் சாரதி ஆகியோர் அக்கரைப்பற்று மற்றும் ஒலுவில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற பகிடிவதையுடன் தொடர்புடைய மோதல் சம்பவமாக இது பதிவாகியுள்ளதாகவும் தற்போது உள்ளக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதை குற்றச்சாட்டில் ஏற்கனவே 12 மாணவர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மையில் குறித்த பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் சிலர், அதே பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்களால் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பகிடிவதை காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக சந்தேகிக்கப்படும் மாணவர்கள் மீதே நேற்று(15) தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் பகிடிவதை இடம்பெற்ற காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் பல்கலைக்கழக முகாமைத்துவத்தினால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் 22 மாணவர்களுக்கு வகுப்புத்தடையும் விதிக்கப்பட்டிருந்தது.