.webp)
Colombo (News1st) மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் புற்றுநோயாளர்களுக்கான கதிரியக்க சிகிச்சை மேற்கொள்ளும் லீனியர் எக்ஸலரேட்டர் (Linear accelerator) இயந்திரங்களில் 03 இயந்திரங்கள் செயலிழந்துள்ளதால் நோயாளர்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
அபேக்ஷா வைத்தியசாலையில் 05 லீனியர் எக்ஸலரேட்டர் (Linear accelerator) இயந்திரங்களே உள்ளன.
கடந்த வாரம் முதல் இந்த இயந்திரங்கள் செயலிழந்துள்ளதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.
இதனால் நாளாந்தம் சுமார் 250 நோயாளர்களுக்கான சிகிச்சைகள் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த இயந்திரங்கள் செயலிழந்து 03 நாட்களுக்குள் அதனை பழுதுபார்க்க வேண்டும் என்ற நிபந்தனை இயந்திரங்களின் பராமரிப்பிற்கான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து ஒப்பந்தத் தொகையில் நாளொன்றுக்கு ஒருவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
எனினும், கடந்த காலங்களில் சம்பந்தப்பட்ட சேவைநிறுவனங்களிடமிருந்து இவ்வாறான மேலதிக கட்டணங்களை அறவிடுவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்கவில்லை என சானக்க தர்மவிக்ரம மேலும் குறிப்பிட்டுள்ளார்.