அரிசிக்கான நிர்ணயவிலையில் மாற்றம் இல்லை - ஜனாதிபதி

அரிசிக்கான நிர்ணய விலையில் மாற்றம் இல்லை - ஜனாதிபதி

by Staff Writer 22-10-2024 | 5:56 PM

Colombo (News 1st) அரிசிக்கான நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாயத் திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இன்று(22) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

நுகர்வுப் பொருட்களின் தற்போதைய விலை தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

நிர்ணய விலை அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அரிசி விலையை மாற்றுவது நியாயமல்ல எனவும்  அரிசி வியாபாரிகளிடம் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

விவசாயிகளிடம் இருந்து அரிசியை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்கும் முறையான பொறிமுறை அவசியம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே அரிசியை சேகரித்து வைப்பவர்களை பதிவு செய்யுமாறு விவசாய அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.