ஊரடங்கு சட்டம் நண்பகல் 12 மணி வரை நீடிப்பு

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நண்பகல் 12 மணி வரை நீடிப்பு

by Staff Writer 22-09-2024 | 6:54 AM

Colombo (News1st) நாடளாவிய ரீதியிலும் நாட்டின் கடற்பரப்பிலும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று(22)நண்பகல் 12 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு 10 மணி முதல் அமுலுக்குவரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள அதிகாரத்தின் பிரகாரம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் வீடுகளில் இருக்கும்படி பொலிஸ் ஊடகப்பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளால் விநியோகிக்கப்பட்டுள்ள அடையாள அட்டைகள், ஆவணங்களை ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்த முடியும் என பொலிஸ் ஊடகப்பிரிவின் அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுக்கு செல்லும் எதிர்ப்பார்ப்பில் விமான நிலையத்துக்கு செல்பவர்களும் வெளிநாடுகளிலிருந்து வருகைதந்து விமான நிலையத்திலிருந்து வெளியேறும் அனைவரும் விமான பயணச்சீட்டு அல்லது அதனை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களை ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரங்களாக பயன்படுத்த முடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் தமது அலுவலக அடையாள அட்டை அல்லது தகுந்த ஆவணத்தை சமர்ப்பிக்க முடியும் என்பதோடு குறித்த ஆவணங்களுடன் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதால் அதனை மீறும் வகையிலான எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.