70 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குப்பதிவு

மாவட்ட ரீதியில் 70 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குப்பதிவு

by Staff Writer 21-09-2024 | 7:56 PM

கொழும்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 1,204 மத்திய நிலையங்களில் இன்று(21) காலை முதல் வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றன.

கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில் இந்த வாக்குகள் எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கொழும்பு மாவட்டத்தில் 78 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதிகமான வாக்காளர்களை கொண்டுள்ள கம்பஹா மாவட்டத்தில் 4 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

களுத்துறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த 735 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.

பஸ்துன்ரட தேசிய கல்வி பீடம் மற்றும் களுத்துறை திஸ்ஸ தேசிய பாடசாலையில் அமைந்துள்ள வாக்கெண்ணும் நிலையங்களில் வாக்கெண்ணும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் 75 வீதத்திற்கும் அதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்டத்தில் இம்முறை வாக்களிப்பதற்கு 11 இலட்சத்து 91 ஆயிரத்து 399 வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

890 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் 4 மத்திய நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மாத்தளை மாவட்டத்தில் 330 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மாலை 04 மணி வரை நடைபெற்ற வாக்களிப்பை தொடர்ந்து வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் 68 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

யாழ். மாவட்டத்தில் இம்முறை 05 இலட்சத்து 93 ஆயிரத்து 187 வாக்காளர்களுக்காக 619 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

2 மத்திய நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் இம்முறை 65.9 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களை கொண்ட வன்னி தேர்தல் தொகுதியில் 387 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

5 மத்திய நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இம்முறை தேர்தல் சுமுகமாக நடைபெற்றதென மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி பி.எஸ்.சரத்சந்திர குறிப்பிட்டார்.

மன்னாரிலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்திலும் இம்முறை தேர்தலில் சுமுகமாக நடைபெற்று முடிந்ததாக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் கூறினார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 71.76 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர்  அ. உமாமகேஷ்வரன் குறிப்பிட்டார்.

இதேவேளை, மட்டக்களப்பு இந்து கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

442 மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றன.

தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. ஜே. முரளிதரன் தெரிவித்தார்.

திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 528 மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றன.

திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 3 இலட்சத்து 15 ஆயிரத்து 925 வாக்காளர்களுக்காக 318 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

திருகோணமலை விபுலானந்தா வித்தியாலயத்தில் வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

திருகோணமலை மாவட்டத்தில் 76 வீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

நுவரெலியா காமினி மத்திய மகா வித்தியாலத்திலும் நுவரெலியா மாவட்ட செயலகத்திலும் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில்  80  வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

காலி மாவட்டத்தில் இம்முறை 9 இலட்சத்து 3163 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

715 வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்குகளை பதிவு செய்திருந்ததுடன் வாக்கெண்ணும் பணிகள் சவுத்லண்ட் மற்றும் அலோஷியஸ் வித்தியாலயத்தில் நடைபெறுகின்றன.

காலி மாவட்டத்தில் இம்முறை 74 வீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

மாத்தறை ராஹூல வித்தியாலயத்தில் வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 416  மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன் வாக்குப்பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாத்தறை மாவட்டத்தில் இம்முறை 76 வீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் இம்முறை 70 வீத வாக்குகளும் அனுராதபுரத்தில் 75 வீத வாக்குகளும் இம்முறை பதிவாகியுள்ளன.

பதுளை மாவட்டத்திலுள்ள 530 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்கப்பட்டதுடன் 73 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மொனராகலை ரோயல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 3 நிலையங்களில் வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில் 80 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

கேகாலை மாவட்டத்தில் 577 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன் இம்முறை 75 வீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.