அமைதியாக நடைபெற்று முடிந்த வாக்களிப்பு

அமைதியாக நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு

by Staff Writer 21-09-2024 | 7:22 PM

Colombo (News1st) இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் இன்று(21) அமைதியாக நடைபெற்றது.

காலை 7 மணியிலிருந்து மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு நடைபெற்று வாக்குப்பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாட்டின் 22 தேர்தல் மாவட்டங்களின் 160 தேர்தல் தொகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 13 ஆயிரத்து 421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்றது.

இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 வாக்காளர்கள் வாக்களிக்கதகுதி பெற்றனர்.

சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பு பல்கலைக்கழகத்தில் தமது வாக்கை பதிவுசெய்தார்.

தமக்கு வாக்களித்த அனைவருக்கும் தாம் நன்றிகளை தெரிவிப்பதாக ரணில் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றதை போன்று தொடர்ந்தும் அமைதியாகவே செயற்படுமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின்  ஜனாதிபதி ​வேட்பாளர்  அனுர குமார திசாநாயக்க கொழும்பு பஞ்சிக்காவத்தை  அபேசிங்காராம  விகாரையில் ஸ்தாபிக்கப்பட்ட வாக்களிப்பு  நிலையத்தில் இன்று முற்பகல் வாக்களித்தார்.

இந்தத் தேர்தலின் வெற்றியை மிக அமைதியாக கொண்டாடுமாறு அவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இராஜகிரிய கோட்டேகொட விவேகாராம புராண விகாரையிலுள்ள  வாக்களிப்பு நிலையத்தில் இன்று முற்பகல் வாக்களித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ஸ இன்று முற்பகல் தங்காலை மெதமுலன டீ.ஏ ராஜபக்ஸ தேசிய பாடசாலை வாக்குச்சாவடியில்  தமது வாக்கை  பதிவுசெய்தார்.