251 வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள்

இந்திய மக்களவை தேர்தலில் தெரிவான 251 வேட்பாளர்கள் மீது குற்றவியல் வழக்குகள்

by Bella Dalima 06-06-2024 | 5:24 PM

Colombo (News 1st) இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று புதிதாக தெரிவான 543 மக்களவை உறுப்பினர்களில் 251 பேர் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

இது தெரிவான மொத்த உறுப்பினர்களில் 46% என்பதுடன், அவர்களில்  27 பேர் குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்களாவர். 

2009-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது குற்றவியல் வழக்குகளைக் கொண்ட மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 55% அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

251 மக்களவை உறுப்பினர்களில் 170 பேர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை, கொலை முயற்சி, கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தண்டணை பெற்ற 27 பேர்  கொலை, கடத்தல், கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வெறுப்பு பேச்சு உள்ளிட்ட வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளனர். 

வெற்றி பெற்ற பா.ஜ.க. வேட்பாளர்களில் 94 பேர் மீதும், காங்கிரஸ் வேட்பாளர்களில் 49 பேர் மீதும், சமாஜ்வாதி வேட்பாளர்களில் 21 பேர் மீதும், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களில் 13 பேர் மீதும், தி.மு.க. வேட்பாளர்களில் 13 பேர் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்ளும் வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.