Colombo (News 1st) ஜப்பானில் ஆபத்தான பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வருகிறது.
அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில், இந்த தொற்று அங்கு இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது.
Streptococcal Toxic Shock Syndrome (STSS) எனப்படும் குறித்த நோய்க்குறிகளுடன் ஜூன் 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம் 977 பேர் பதிவாகியுள்ளனர். இவற்றில் இறப்பு விகிதம் 30% வரை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் 77 பேர் இந்த தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் ஜப்பானில் இத்தொற்றினால் சுமார் 941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 97 பேர் உயிரிழந்ததாக ஜப்பானின் தேசிய தொற்றுநோய்கள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
STSS என்பது ஒரு அரிதான ஆனால் தீவிரமான பாக்டீரியா தொற்று ஆகும். ஆழமான திசுக்கள் மற்றும் இரத்த ஓட்டத்தில் இந்த பாக்டீரியா பரவும் போது இந்நோய் ஏற்படுகிறது.
நோயாளிகள் ஆரம்பத்தில் காய்ச்சல், தசை வலி மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். பின்னர் இது இரத்த அழுத்தம், வீக்கம், உறுப்பு செயலிழப்பு போன்று தீவிர பிரச்சினைகளை ஏற்படுத்தி, உயிருக்கு அச்சுறுத்தலாக மாறும்.
இந்நோய்க்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும் கூட, உயிர் ஆபத்துகளை விளைவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்ட 10 இல் மூவர் உயிரிழக்கும் சாத்தியம் உள்ளதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க நிலையம் (CDC) தெரிவித்துள்ளது.
பெரும்பாலான STSS தொற்றுகள் Group A streptococcus பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா குழந்தைகளில் காய்ச்சல் மற்றும் தொண்டை தொற்றுகளை ஏற்படுத்துகிறது. அரிதான சூழ்நிலைகளில், பாக்டீரியம் ஒரு நச்சுத்தன்மையை உற்பத்தி செய்யும் போது Strep A, இரத்த ஓட்டத்துடன் கலந்து தீவிர உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
இது Necrotizing fasciitis எனப்படும் மனிதர்களின் தசையை உண்ணும் பாக்டீரியா தொற்றாக மாறி, கை கால்களை இழக்கும் நிலைக்கு இட்டுச்செல்லக்கூடும். மேலும் புற்றுநோய் போன்ற வேறு சில நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடையவும் இது வழிவகுக்கும்.
Covid-19 தொற்றினை கட்டுப்படுத்த கையாண்ட வழிமுறைகளை இந்நோயை கட்டுப்படுத்தவும் கையாளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறந்த காயம் உள்ள வயதானவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு STSS பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என CDC கூறியுள்ளது.
எனினும், பெரும்பாலான நோயாளர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதை நிபுணர்களால் கண்டறிய முடியவில்லை.