கடும் பனிப்பொழிவால் 7.1 மில்லியன் கால்நடைகள் பலி

மங்கோலியாவில் கடும் பனிப்பொழிவால் 7.1 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழப்பு

by Bella Dalima 13-06-2024 | 3:05 PM

Mongolia: மங்கோலியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 7.1 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

இது அந்நாட்டின் மொத்த கால்நடைகளில் 10 இல் ஒரு பங்கிற்கும் அதிகமாகும். 

இதனால், கால்நடை வளர்ப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 

காலநிலை மாற்றம் காரணமாக கடும் வறட்சியும் குளிர் காலங்களில் அதிகரித்த பனிப்பொழிவும் அங்கு நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. 

பனிக்காலம் கால்நடைகளின் இனப்பெருக்க காலமாக இருப்பதால், போசாக்கு குறைபாடு உள்ள பெண் கால்நடைகளும், அவற்றின் குட்டிகளும் அதிகம் இறக்கின்றன. 

மங்கோலியாவின் பொருளாதாரத்திலும் கலாசாரத்திலும் கால்நடை வளர்ப்பு பெரும் பங்காற்றுகிறது. கால்நடை வளர்ப்பையொட்டியே 80% வேளாண் உற்பத்தி நடைபெறுகிறது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11% பங்களிப்புச் செய்கிறது. 

கிழக்கு ஆசியாவின் மங்கோலியாவில் 1975 ஆம் ஆண்டுக்கு பிறகு இதுவரை இல்லாத வகையில், இம்முறை கடும் பனிப்பொழிவு நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. 

கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் பசுக்கள், ஆடுகள் என 21 லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இது மே மாதத்தில் 71 இலட்சமாக அதிகரித்துள்ளது. 

பனியிலிருந்து காக்கும் வகையில், பாதுகாப்பான இடங்களுக்கு வாகனங்கள் மூலம் கால்நடைகள் அழைத்துச் செல்லப்படுகின்றன. எனினும், பெரிய அளவிலான தொகை இதற்கு செலவாவதால், கால்நடைகளை பராமரிப்பவர்கள், பணத்தை சேமிக்கும் வகையில், பனிக்காலங்களில் அவற்றை மந்தையிலிருந்து திறந்துவிடுகின்றனர்.