கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழப்பு

தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழப்பு; 125-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

by Bella Dalima 20-06-2024 | 3:07 PM

Tamil Nadu; தமிழகத்தின் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்துள்ளதுடன், 125-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அச்சம் வௌியிடப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் தொடர்பில் கள்ளச்சாராய (விஷச்சாராய) விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மெத்தனால் கலந்த விஷச்சாராய உற்பத்தியிலும் விற்பனையிலும் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து, அவர்களிடம் உள்ள மெத்தனால் கையிருப்பை கைப்பற்றி அழிக்குமாறும் அவர்களுக்கு அது எவ்வாறு கிடைத்தது என்பதை விசாரிக்குமாறும் பொலிஸாருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

கள்ளச்சாராய வியாபாரத்தை தடுக்க முயன்ற அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இதனிடையே,  இச்சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைத்து விசாரணைகளை முன்னெடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 இலட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.