ஈரான் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி செயலகத்தில் உத்தியோகபூர்வ வரவேற்பு

by Staff Writer 24-04-2024 | 8:07 PM

Colombo (News 1st) இலங்கைக்கு இன்று (24) காலை வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ​ரெய்சியை (Ebrahim Raisi) வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவேற்றதுடன், இதன்போது முப்படையினரின் அணிவகுப்பு மாியாதையும் இடம்பெற்றது.

ஈரான் அரச தலைவரை வரவேற்கும் நோக்கில், 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.

பாகிஸ்தானுக்கான விஜயத்தை நிறைவு செய்த ஈரான் ஜனாதிபதி  கலாநிதி இப்ராஹிம் ரெய்சி விசேட விமானமொன்றின் மூலம் இன்று காலை 10.30 அளவில் மத்தளை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். 

இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் செங்கம்பள வரவேற்பளித்து ஈரான் ஜனாதிபதியை பிரதமர் தினேஷ் குணவர்தன வரவேற்றார். 

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை திறந்து வைப்பதற்கு முன்னர், மத்தளை விமான நிலைய வளாகத்திலுள்ள விசேட நினைவுப் புத்தகத்திலும் ஈரான் ஜனாதிபதி இப்ரஹிம் ரெய்சி நினைவுக்குறிப்பொன்றை பதிவிட்டார்.

 உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ரஹிம் ரெய்சி மத்தளை விமான நிலையத்திலிருந்து கரதகொல்லவுக்கு சென்றார். 

இதன்போது, ஈரான் ஜனாதிபதியை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவேற்றார். 

அதன் பின்னர் இரண்டு ஜனாதிபதிகளும் இணைந்து உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர். 

2007 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய, உமா ஒயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஈரானின் அப்போதைய ஜனாதிபதி மஹமூத் அஹமதி நெஜாத்தின் தலைமையில் இந்த திட்டத்திற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 

தற்போதைய நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சரின் தந்தையான சமல் ராஜபக்ஸ அப்போது இலங்கையின் நீர்ப்பாசன அமைச்சராக பதவி வகித்தார்.

529 மில்லியன் டொலர் மதிப்பீட்டு செலவில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கான செலவில் 85 வீதத்தை ஈரான் அரசாங்கம் வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது.

2015 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி இந்த திட்டத்தின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தாலும் எதிர்பாராதவாறு பிரதான சுரங்கத்தில் ஏற்பட்ட நீர்க்கசிவு , COVID தொற்று என்பவற்றால் நிர்மாணப் பணிகள் மேலும் தாதமமாகின.

சுற்றுச்சூழல் சவால்களால் இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் திட்டத்தை தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.

2007 ஆம் ஆண்டிலிருந்து நீர்ப்பாசன அமைச்சர்களாக பதவி வகித்த சமல் ராஜபக்ஸ, நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திசாநாயக்க, விஜித் விஜயமுனி சொய்சா, ரொஷான் ரணசிங்க மற்றும் பீ.ஹரிசன் ஆகியோரது காலங்களில் இந்தத் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின்கீழ் புஹுல்பொல நீர்த்தேக்கத்தில் நிர்மாணிக்கப்பட்ட அணைக்கட்டின் மூலம் சேரிக்கப்படுகின்ற நீர் நான்கு கிலோமீட்டர் நீளமான சுரங்கத்தின் ஊடாக டயரபா நீர்த்தேக்கத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

டயரபா நீர்த்தேக்கத்தில் நிர்மாணிக்கப்பட்ட அணைக்கட்டின் ஊடாக அந்த நீரை சேமித்து பின்னர் 15.5 கிலோமீட்டர் நீளமான சுரங்கத்தின் ஊடாக எல்ல எரந்தகொல்ல பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இரண்டு நிலக்கீழ் டர்பைன்களை நோக்கி கொண்டு செல்லப்படவுள்ளதுடன், அந்த இரண்டு டர்பைன்கள் ஊடாக தலா 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது.

மின் உற்பத்தியின் பின்னர் அந்த நீர் மேலும் நான்கு கிலோமீற்றர் நீளமான சுரங்கத்தின் ஊடாக அலிகொட்ட நீர்த்தேக்கத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதுடன், நீர் ஹந்தபானாகல, குடாஒயா நீர்த்தேக்கங்களுக்கு அனுப்பப்படவுள்ளது. 

இதன் மூலம் இரண்டு போகங்களிலும் சுமார் 15,000 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்வதற்காக நீர் விநியோகிக்கப்படவுள்ளது. 

பதுளை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவையினை நிறைவேற்றுவதற்கு இந்தத் திட்டத்தின் ஊடாக வாய்ப்பு கிட்டவுள்ளது. 

இதேவேளை, உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர், மத்தளை சர்வதேச விமான நிலையத்திற்கு மீண்டும் வருகை தந்தனர். 

இதனையடுத்து, தூதுக்குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்ததுடன், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட தரப்பினர் தூதுக்குழுவினரை வரவேற்றனர். 

இதேவேளை, ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹின் ரெய்சியின் மகளான ரிஹானி சதாத் ரயில் அல்சதாத் இன்று காலை ஹம்பாந்தோட்டை சாஹிரா கல்லூரிக்கு சென்றிருந்தார்.

பாடசாலையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் அதிபருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

இதன் பின்னர் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்விலும் பங்கேற்றிருந்தார்.