இரண்டாவது தடவையாக பேச்சுவார்த்தைக்கு வராத முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள்

by Bella Dalima 24-04-2024 | 6:49 PM

Colombo (News 1st) பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் தொடர்பாக கலந்துரையாட இன்று (24) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சம்பள நிர்ணய சபையின் இரண்டாவது பேச்சுவார்த்தை கோரமின்மையால் நடைபெறவில்லை. 

இன்றைய பேச்சுவார்த்தையிலும் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கவில்லை. 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை தீர்மானிப்பதற்கான சம்பள நிர்ணய சபையின் இரண்டாவது  பேச்சுவார்த்தை கொழும்பில் உள்ள தொழில் திணைக்களத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் பங்கேற்பதற்காக ஒன்பது தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும், அரசாங்க பெருந்தோட்ட யாக்கத்தின் பிரிதிநிதியும், தொழில் ஆணையாளரும் கலந்துகொண்டிருந்த போதிலும் பிரதான பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருக்கவில்லை.

எனவே இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு போதிய கோரம் இன்மையினால் இன்றைய பேச்சுவார்த்தை நடைபெறவில்லையென தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

கடந்த 10 ஆம் திகதி முதலாவது  சம்பள நிர்ணய சபைக் கூட்டம் நடைபெற்ற சந்தர்ப்பத்திலும் பேச்சுவார்த்தைக்கு முதலாளிமார் சம்மேளத்தின் பிரதிநிதிகள் வருகை தராமையினால், 14 நாட்களுக்கு பின்னர் இன்று இரண்டாவது முறையாக சம்பள நிர்ணய சபை கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்,  தற்போதைய சூழ்நிலையில் பெருந்தோட்டத் தொழிலாளருக்கு 1700 ரூபா அடிப்படை சம்பளம் வழங்க முடியாது என பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் ராஜதுரை நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

1000 ரூபா அடிப்படை சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவுகளையே வழங்க முடியும் என ஜனாதிபதியும் பகிரங்கமாக கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கொன்று விசாரணையில் உள்ளமையினால், சம்பள நிர்ணய சபை பேச்சுவார்த்தைகளில் தங்களால் கலந்துகொள்ள முடியாது எனவும் ரொஷான் ராஜதுரை கூறினார்.

தொழிலாளர்களுக்கு 1700 அடிப்படை சம்பளம் வழங்கினால், வருடமொன்றுக்கு 35 பில்லியன் ரூபா மேலதிகமாக செலவிட வேண்டியுள்ளதாகவும் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அதனை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் கூறினார்.

எனவே, உற்பத்திற்கு ஏற்றவாறு சம்பளத்தை அதிகரித்து வழங்கும் இரண்டு திட்டங்களை தாம் முன்வைத்துள்ளதாகவும் அதனை நடைமுறைப்படுத்தினால் உற்பத்தி அதிகரிப்பதுடன், தொழிலாளர்களுக்கு அதிக சம்பளத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பெருந்தோட்ட நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஊடகப்பேச்சாளர் ரொஷான் ராஜதுரை நியூஸ்ஃபெஸ்டிற்கு மேலும் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்